IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் அதே வேளையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாகி உள்ளது. வரும் நவ. 24, 25ஆகிய இரண்டு நாள்கள் சௌதி அரேபியா நாட்டின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 10 அணிகளும் தலா 25 வீரர்களை எடுக்கலாம். அதன்மூலம், 250 வீரர்கள் 10 அணிக்கும் தேவை.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) முன்னதாகவே 46 வீரர்கள் 10 அணிகளால் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம், மீதம் உள்ள 204 இடங்களை நிரப்பவே இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த 204 வீரர்களில் 70 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.110.5 கோடியை கையிருப்பில் வைத்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறைந்தபட்சமாக ரூ.41 கோடியை கையிருப்பில் வைத்திருக்கிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் மட்டும் ஏலத்தில் RTM இல்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிகபட்சமாக 4 RTM உள்ளது.
மெகா ஏலத்தில் முக்கிய வீரர்கள்
குறிப்பாக, இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். கடந்த சீசனில் கேப்டனாக இருந்த இந்திய நட்சத்திர வீரர்கள் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தற்போது ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசனில் கேப்டன்ஸியை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி ஜாஸ் பட்லர், ஸ்டார்க், ரபாடா போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்களும் ஏலம் விடப்பட இருக்கின்றனர். மொத்தம் 12 முக்கிய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் அவர்கள் இரண்டு செட்களாக பிரித்து முதலில் ஏலம் விட இருக்கிறது. இந்த இரு செட்களில் வரும் 12 வீரர்களும் பெரிய தொகைக்கு ஏலம் போக வாய்ப்பிருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) உள்ளிட்ட அதிக தொகை வைத்துள்ள வீரர்கள் இந்த 12 வீரர்களில் அதிகமானோரை தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ரிஷப் பண்டை பஞ்சாப் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுலை ஆர்சிபியும், ஷ்ரேயாஸ் ஐயரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் அதிக தொகைக்கு சென்று எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் யார் எந்தெந்த அணிக்கு, எவ்வளவு தொகையில் செல்ல இருக்கிறார்கள் என பலரும் தங்களின் கணிப்பை அள்ளி வீசி வருகின்றனர்.
சுனில் கவாஸ்கர் கருத்து
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ரிஷப் பண்ட் இன்று X தளம் மூலம் பதிலளித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில் பேசிய சுனில் கவாஸ்கர், சில முன்னணி வீரர்கள் தங்களின் உண்மையான விலையை தெரிந்துகொள்வதற்காக அணியில் இருந்து விலகி ஏலத்திற்கு வருகிறார்கள் என தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அவர்,”டெல்லி அணி ரிஷப் பண்டை நிச்சயம் தக்கவைக்க நினைத்திருக்கும். வீரர்களை தக்கவைக்கும்போது, எந்த தொகையில் தக்கவைப்பது என்பது குறித்து வீரரும், அணியும் கலந்து பேசும்.
இப்போது அணிகளால் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களும் கூட, ஏலத்திற்கு வந்தால் அவர்கள் அந்த தொகையைவிட அதிகம் போவார்கள். டெல்லிக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் தக்கவைக்கப்படும் தொகை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். டெல்லி அணிக்கு ரிஷப் பண்டை (Rishabh Pant) மீண்டும் எடுக்கும் என எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு கேப்டனும் வேண்டும் அல்லவா… ரிஷப் பண்ட் அவர்களின் அணியில் இல்லையென்றால் அவர்கள் புதிய கேப்டனையும் பார்க்க வேண்டும்” என்றார்.
ரிஷப் பண்ட் பரபரப்பு பதில்
இதற்கு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரிஷப் பண்ட் தனது X தளத்தின் மூலம் இன்று பதில் அளித்துள்ளார். அதில் அவர்,”என்னை தக்கவைக்காதது, பணம் சார்ந்த பிரச்னையால் அல்ல என்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்…” என பதிவிட்டுள்ளார். ரிஷப் பண்டின் இந்த கருத்து இப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஏழு வருடங்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) நீக்கப்பட்டு, அணியின் இயக்குநராக இருந்த சௌரவ் கங்குலியும் (Sourav Ganguly) மாற்றப்பட்டார். அவர்களுக்கு பதில் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியும் (Hemang Badani), இயக்குநராக வேணுகோபால் ராவும் (Venugopal Rao) நியமிக்கப்பட்டனர்.
My retention wasn’t about the money for sure that I can say
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024
ரிஷப் பண்டுக்கு என்ன பிரச்னை?
இதில்தான் ரிஷப் பண்ட்டுக்கும் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக முன்னர் தகவல்கள் தெரிவித்தன. டெல்லி கேப்பிடல்ஸ் அணி JSW குழுமம், GMR குழுமம் என இரண்டு உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் ஒரு குழுமம் இரண்டு ஆண்டுகள் அணியை நிர்வகித்தால், அடுத்த குழுமம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லி அணியை நிர்வகிக்கும்.
அந்த வகையில், கடந்த இரண்டு சீசன்கள் (2023, 2024) JSW குழுமம் நிர்வகித்த நிலையில், அடுத்த இரண்டு சீசனை (2025, 2026) GMR குழுமம் நிர்விகிக்க இருக்கிறது. தற்போது அணியில் ஏற்பட்ட மாற்றத்தால், GMR குழுமத்திற்கும், ரிஷப் பண்டிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது ரிஷப் பண்ட்டின் பதிவு இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது எனலாம்.