சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் – பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, “சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பாடகர் குருகுகன் (26) என்பவர் எனக்கு கடந்த 19.5.2024-ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமானார். அவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதோடு மியூசிக் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இசை நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்கள் இருவரும் போனில் பேசி வந்தோம். அப்போது என்னை காதலிப்பதாக குருகுகன் கூறினார். உடனே நான், என்னுடைய பெற்றோரிடம் பேசும்படி கூறினேன். அதன்பிறகு வீட்டுக்கு வந்த குருகுகன், என்னுடைய பெற்றோரிடம் என்னை பெண் கேட்டார். அதற்கு என்னுடைய பெற்றோர், நாங்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் என் மகளுக்கும் உங்களுக்கும் வயது வித்தியாசம் என கூறினார்கள். மேலும் உங்களுடைய அப்பா, அம்மா இந்த திருமணத்துக்கு சம்மதிப்பார்களா என்று குருகுகனிடம் கேட்டனர். அதற்கு அவர் என்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு சாதி முக்கியமல்ல என்று கூறிவிட்டு திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துவிட்டு சென்றார் குருகுகன்.

குருகுகன்

கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி எனக்கு உடல் நலம் சரியில்லை. அப்போது நான் பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். அதைத் தெரிந்து கொண்ட குருகுகன், அங்கு வந்தார். அப்போது நான் வீட்டில் யாருமில்லை என்று கூறினேன். அதற்கு அவர், நான் உன்னைதான் பார்க்க வந்தேன் என்று கூறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது என்னிடம் குருகுகன் தவறாக நடக்க முயற்சி செய்தார். அதற்கு நான் மறுத்து திருமணத்துக்குப்பிறகுதான் எல்லாம் என்று கூறினேன். அப்போது என்னை குருகுகன் அடித்து உதைத்ததோடு வலுகட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.

அதனால் நான் இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், நாம்தான் திருமணம் செய்து கொள்ள போகிறோமே எனக் கூறி என்னை சமாதானப்படுத்தினார். அதோடு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டார்.

இதையடுத்து செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியில் செல்லலாம் எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார் குருகுகன். அவர் எங்கு அழைத்துச் செல்கிறார் என்று என்னிடம் கூறவில்லை. திடீரென ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற குருகுகன், அங்கு கர்ப்பத்தை கலைக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார். பின்னர் மருத்துவமனையின் ரிப்போர்ட்களை எல்லாம் குருகுகன் கிழித்து எரிந்து விட்டார். அதன்பிறகு குருகுகன் என்னிடம் சரிவர பேசுவதில்லை. இந்தச் சமயத்தில்தான் குருகுகன் என்னைப் போலவே சிலரை ஏமாற்றியிருக்கும் தகவல் எனக்கு தெரியவந்தது. அதுகுறித்து குருகுகனிடம் கேட்டபோது அவரின் செயல்களில் மாற்றங்கள் தெரிந்தன.

கடந்த 20.10.2024-ம் தேதி குருகுகனின் பெற்றோரிடம் திருமணம் குறித்து பேச நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள் சாதியை குறிப்பிட்டு பேசியதோடு எங்களையும் மிரட்டினர். அதன்பிறகு குரு மற்றும் அவரின் குடும்பத்தினர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர்கள் குடியிருந்தை வீட்டையும் காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். எனவே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய குருகுகன், என் வாழ்க்கையை திட்டம் போட்டு நாசமாக்கிய அவரின் குடும்பத்தனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குருகுகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதையும் தடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார். அ

தன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலாவதி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாடகர் குருகுகனைத் தேடிவந்தார். இந்தநிலையில் பாடகர் குருகுகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

இதுகுறித்து பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸாரிடம் பேசினோம். “பாடகர் குருகுகன் மீது புகார் வந்ததும் அவரை தேடி வந்தோம். ஆனால் அதற்குள் புகாரளித்த பெண் தரப்பில் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று பாடகர் குருகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேட்டிக் கொடுத்தனர். அதனால் எங்களுக்கு கமிஷனர் அலுவலகத்திலிருந்து பாடகர் குருகுகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு வந்தது. இதையடுத்து பாடகர் குருகுகன் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் எங்கு கரு கலைக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளோம். இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை குருகுகனின் பெற்றோர் சாதியை குறிப்பிட்டு மிரட்டியதாக புகார் வந்திருப்பதால் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ – புத்தக முன்பதிவு

ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்ய,  https://books.vikatan.com/ இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். தொலைபேசி வழியாக முன்பதிவு செய்ய, 8056046940, 9789977823, 9500068144 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.