கடந்த ஆண்டு, மே மாதம் தொடங்கிய மணிப்பூர் கலவரம், ஓன்றரை வருடமாக ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. சமீப மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கலவரம், தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியிருக்கிறது!
மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி மக்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வேண்டுமெனப் போர்க்கொடி தூக்க, போராட்டத்தில் குதித்தனர் குக்கி பழங்குடிகள். இதனால், இரண்டு இனக்குழுக்களுக்கும் மோதல் ஏற்பட, மணிப்பூரில் வெடித்தது மிகப்பெரிய வன்முறை. அரசு, காவல்துறையின் உதவியோடு, குக்கி பழங்குடி மக்களின் சொத்துகளையும், உயிர்களையும் மெய்தி இனக் கிளர்ச்சிக் குழு பறித்தாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. `மேதி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், முதல்வர் பிரேன் சிங், குக்கி மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து, குக்கி இனக் கிளர்ச்சியார்கள், மெய்தி குழுவுக்கு எதிராகப் பதிலடி தாக்குதல் நடத்த, போர்க்களமானது மணிப்பூர்.
கலவரத்தின் ஒருபகுதியாக, குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, ஒட்டுமொத்த மனித இனத்தையும் உலுக்கியெடுத்தது. இந்த வீடியோ வெளியான பிறகு, உலக அரங்கிலும் பேசுபொருளானது மணிப்பூர் வன்முறை. மணிப்பூர் அவலங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன.
`எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா’ அமைப்பின் குழு நேரடியாக ஆய்வு செய்து மணிப்பூரின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அந்தக் குழுவின்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கியது மாநில பா.ஜ.க அரசு. கலவரம் தொடங்கிய சமயத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக மணிப்பூருக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. பிரதமர் மோடியோ, ஓரிரு நிமிடங்கள் மட்டுமே மணிப்பூரைப் பற்றிப் பேசினார். அதுவும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசினாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.
இந்தக் கலவரத்தில் இதுவரை 220-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 60,000 மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வெகு சில வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகி வந்த நிலையில், கடந்த வாரம் 11-ம் தேதி, ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த வன்முறை, மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
புதிதாக வெடித்த வன்முறை
மணிப்பூரில் வன்முறையில், பல மாதங்களாகப் பாதிக்காத பகுதியாகவே இருந்தது ஜிரிபாம் மாவட்டம். கடந்த ஜூனில், கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகே ஜிரிபாமிலும் கலவரம் பரவியது. குறிப்பாகக் கடந்த நவம்பர் 11-ம் தேதி, ஜிரிபாம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், குக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த 45 நிமிட துப்பாக்கிச்சூட்டில் 11 குக்கி இனக் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக மணிப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ஜிரிபாம் மாவட்டத்திலுள்ள போரோபெக்ரா காவல் நிலையத்தின்மீதும், அதற்கு அருகேயுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் முகாம்மீதும் குக்கி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர். பதில் தாக்குதல் நடத்தியதில் 11 குக்கி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து நவீனத் துப்பாக்கிகள், புல்லட் ப்ரூஃப் ஹெல்மெட்டுகள், தோட்டகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அருகிலிருந்த நிவாரண முகாமிலிருந்த ஆறு பேரைக் காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்களா என்ற விசாரணையும், தேடும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் குக்கி சங்கமோ, “கொல்லப்பட்ட 11 பேரும் கிராமங்களைப் பாதுகாத்து வந்த குக்கி இளைஞர்கள்தான். இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றது.
அதன் தொடர்ச்சியாக, கடத்தப்பட்ட மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் என ஆறு பேரின் உடல்களும், தற்போது ஜிரி ஆற்றில் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த ஆறு பேரும் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த இன மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். போராட்டத்தின்போது, பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்குச் சொந்தமான வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த வன்முறை பரவிய நிலையில், பல இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இணை சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது.
நிலைமை கைமீறிச் சென்றதால், மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தைக் கைவிட்டு விட்டு டெல்லி திரும்பிய அமித் ஷா, அவசர ஆலோசனையை நடத்தினார். பின்னர், சமீபத்திய வன்முறைகள் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, கூடுதலாக 5,000 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பவும் உத்தரவிட்டிருக்கிறார்.
உலகம் சுற்றும் மோடி
“மணிப்பூருக்குச் சென்று பிரச்னையைத் தீர்க்க வேண்டிய மோடி உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று அமைதி குறித்து பாடம் எடுப்பவரால், உள்நாட்டில் நடக்கும் கலவரத்தை அடக்க முடியவில்லை. பா.ஜ.க-வின் டபுள் இன்ஜின் அரசு மணிப்பூரில் படுதோல்வியடைந்திருக்கிறது. கலவரத்துக்குக் காரணமானவர்களுள் ஒருவராக இருக்கும் மாநில முதல்வர் பிரேன் சிங்கை முதலில் நீக்க வேண்டும்” என்கின்றன எதிர்க்கட்சிகள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவோ, “மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஏனெனில், அது அவர்களின் பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது. கலவரத்தால் பாதிக்கப்படும் பட்டியலில் பல மாவட்டங்கள் புதிதாக இணைந்திருக்கின்றன. அண்டையிலுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் வன்முறைத் தீ பரவிக் கொண்டிருக்கிறது. அழகான எல்லை மாநிலமான மணிப்பூரைப் பிரதமர் மோடி கைவிட்டு விட்டார்” என்றிருக்கிறார்.
அரசியல் பார்வையாளர்களோ, “சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் மோசமான கலவரம் இது. ஏற்கெனவே, சில உலக நாடுகள் இந்தக் கலவரம் குறித்துப் பேசியிருக்கின்றன. குறிப்பாக, கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. தற்போது மீண்டும் கலவரம் பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச ஊடகங்களும் மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத மோடி அரசின் தோல்வி குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. உலக அரங்கில், மோடி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ், மணிப்பூர் கலவரத்தால் சரியத் தொடங்கியிருக்கிறது. `மோடி’ பிம்பம் முழுவதுமாக சரிவதற்கு முன்பாக, கலவரத்தை மத்திய அரசுக் கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…