சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர் 14) கங்குவா திரைப்படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டதன்படி திரையரங்குகளில் படத்தின் ஒலி குறைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் நடிகர் சூரி, “கங்குவா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட படம். படத்தைப் பார்த்த பலர் நல்லா இருப்பதாகக் கூறி ஆதரவு தருகின்றனர். ஆனால், சிலர் படத்தைப் பார்த்தும், பார்க்காமலே நெகட்டிவான விமர்சனங்களைத் தருகின்றனர். வாரம் வாரம் நாம் கவனிக்கப்பட வேண்டும், வைரலாக வேண்டும் என கேமரா முன் வந்து நெகட்டிவாகப் பேசுகிறார்கள்.” என்று கூறி படம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரனும் கங்குவா படத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவா திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரமாண்டமான திரைப்படம் இது. ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சிவா. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சூர்யா sir-ன் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. Camara, CG என அனைத்துத் துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்.” என்று சுசீந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “தெலுங்கில் எப்படி பாகுபலி பிரமாண்ட திரைப்படமோ, அதுபோல தமிழ் சினிமாவில் கங்குவா பிரமாண்டமான திரைப்படம். மிக முக்கியமான சினிமா. எதற்காக இந்தத் திரைப்படத்தைப் பற்றித் தவறான கருத்துகளை பதிவுசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து குடும்பத்தோடு சென்று பாருங்கள். சூர்யா சாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் வேலை செய்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பிரமிப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் சிவா சாருக்கு வாழ்த்துகள்” என்று சுசீந்திரன் வீடியோ ஒன்றில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…