ராஞ்சி: “மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் அரசியல் லாபம் அடைவதில் பாஜக நிபுணத்துவம் பெற்ற கட்சியாக உள்ளது,” என்று ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், எஞ்சியுள்ள 38 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 20) 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவு:
“நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை தூண்டி வருகிறது பாஜக. மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் அரசியல் லாபம் அடைவதில் பாஜக நிபுணத்துவம் பெற்ற கட்சியாக உள்ளது. அதே முயற்சியைத்தான் இங்கும் பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர். ஆனால், ஜார்க்கண்ட் மக்கள் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.
உங்களுக்குள் (பொது மக்கள்) வெறுப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் லாபம் அடைவதே பாஜகவினரின் நோக்கம். இந்த முறையில் பிரச்சாரம் செய்வது எளிதானது. பாஜக இதில் நிபுணத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் ஜார்கண்டைச் சேர்ந்தவன். எங்கள் கலாச்சாரம் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காது. நான் எப்போதும் இதுபோல செய்யவே மாட்டேன்.
எனக்கு எதிராகப் பொய்களை கட்டவிழ்த்துவிடும் வெறுப்பு பிரச்சாரத்துக்காக பாஜக சுமார் ரூ. 500 கோடி செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கூட்டி வந்து சாலைகள், சாலை சந்திப்புகள், வளர்ச்சித் திட்டங்கள் நன்றாக இல்லை எனத் திட்டமிட்டுப் பேச வைத்துள்ளனர்.
இதுவும் பாஜகவின் புதிய வித்தையாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ரூ.1 கோடியை செலவழித்துள்ளனர். அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்துப் பேச மாட்டார்கள். மாறாகப் பொய்களால் உங்களைப் பயமுறுத்துவார்கள். அதாவது வேறு மாநில மக்களை ஜார்க்கண்டுக்கு அழைத்து வந்து, அவர்களை மக்களுடன் மக்களாக இருக்க வைத்து எனது அரசு மீது பாஜகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
சமூக வலைதள பிரச்சாரத்துக்காக மட்டும் பாஜக பல கோடி ரூபாய் பணம் செலவழித்து உள்ளது. மேலும் வாட்ஸ்-அப் செயலியில் சுமார் 95 ஆயிரம் வாட்ஸ்எப் குரூப்களை உருவாக்கி அதில் எனக்கு எதிராக பொய்யான செய்திகளை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். என்னைப் பற்றி பொய்யான தகவல்கள், யூகச் செய்திகள், எனக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வதன் மூலம் வெற்றி அடைய பாஜக நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை நான் எப்போதும் விரும்புவதில்லை. ஜார்க்கண்ட் மாநில மக்களை கேட்டுக் கொள்வது ஒன்றுதான். எங்களுக்காக வாக்களிக்கயுங்கள். பொய்யான பிரச்சாரத்தைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.