முடங்கிய இன்ஸ்டாகிராம்… தவிச்சு போன இளசுகள் – இந்த வாரத்தில் இது 2வது முறை…!!!

Instagram Down Latest News Updates: பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. அதேபோல், இளைஞர்களின் இதய கூடாரமாக விளங்கும் இன்ஸ்டாகிராம் செயலியும் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும், வெளிநாடுகளின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் இன்று முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனால் லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்கள் அந்த செயலியை பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, லாக்இன் ஆவதில் பிரச்னை, ஸ்டோரிகள் அப்லோட் செய்வதில் பிரச்னை, மெசேஜ் அனுப்பவதில் பிரச்னை, சர்வர் உடன் இணைவதில் பிரச்னை என பல்வேறு தொழில்நுட்ப கோளாறை இன்று இன்ஸ்டாகிராம் பயனர்கள் சந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் இருந்து பிரச்னை

இன்ஸ்டாகிராமில் இன்று காலை தொடங்கி இந்த தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும், பலரும் இதனால் மற்ற சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, X தளத்தில் இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து பல்வேறு பயனர்கள் பதிவிட்டதை காண முடிகிறது. உலகளவில் இந்த பிரச்னை நீடிப்பதால் அதன் பரந்துவிரிந்த பயனர்கள் மத்தியில் அன்றாட தகவல் தொடர்பும், வணிக ரீதியான செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிகிறது.

Downdetector என்ற தளம் இதுபோன்ற ஆன்லைன் சேவை இடையூறுகளை கண்காணிக்குக் கூடியதாகும். இதில், இன்று காலை 10.37 மணியளவில் இன்ஸ்டாகிராமில் மட்டும் 700 புகார்களை பெற்றதாக பதிவு செய்திருக்கிறது. இந்த ஒரு வாரத்திற்குள் இன்ஸ்டாகிராம் செயலி இதுபோல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்குவது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் இருந்து மட்டும் இரவு 9.51 மணியளவில் இன்ஸ்டாகிராம் சார்ந்த 130 புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்னென்ன பிரச்னைகள்?

தற்போதைய நிலவரப்படி, புகார் எழுப்பியுள்ள மொத்த பயனர்களில் 42 சதவீதத்தினருக்கு லாக்இன் செய்வதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், 39 சதவீதத்தினருக்கு சர்வர் உடன் இணைவதில் பிரச்னை இருந்துள்ளது. 19 சதவீத பயனர்களுக்கு செயலியை பயன்படுத்துவது கடினமாகியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இந்த தொழில்நுட்ப பிரச்னை சார்ந்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதற்கான பதிலோ அல்லது தீர்வு குறித்தோ அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் தற்போது நிலைமை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. பயனர்கள் வழக்கம்போல் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.  

ஏஐ மூலம் புரோஃபைல் போட்டோ

முன்னதாக, மெட்டா நிறுவனம் அதன் சமூக வலைதளங்களில் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் வந்தன. தொழில்நுட்ப டெவலப்பரான அலெஸாண்ட்ரோ பலுஸி இதுகுறித்த தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது, பயனர்கள் தங்களின் சுயவிவரப் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் வசதியை இன்ஸ்டாகிராம் தற்போது செயல்பட்டு வருவதாக கூறியிருந்தார். 

அதே நேரத்தில் இந்த வசதி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிலும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்த அவர், இதுகுறித்து வேறு தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “Create an AI Profile Picture” என இன்ஸ்டாகிராமில் அவருக்கு காணப்பட்ட ஆப்ஷனை சுட்டிக்காட்டி, அதன் புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.