மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் தனது பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டிய நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் உலகளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது. இந்தச் சமயத்தில், விளாடிமிர் புதினின் இந்திய பயணம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
புதினின் இந்தியப் பயணம் குறித்த குறிப்பிட்ட விவரங்களை ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேம்போக்காக தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் மாஸ்கோவில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய போது, ரஷ்ய அதிபரை இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ரஷ்ய அதிபர் தனது பயணத்தின்போது புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றிருந்தபோது இரு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது, ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையை குறிப்பிட்ட பிரதமர் மோடி, மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை இந்தியா நம்புகிறது என்று புதினிடம் தங்களது கடைசி நேர சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
அதோடு அவர், ”அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பது எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று அவர் கூறியிருந்தார். இந்த ஆண்டு பிரதமர் மோடி இரண்டு முறை ரஷ்யாவிற்கு பயணம் செய்ததன் மூலம் ரஷ்யாவுடனான உறவை வெளிப்படுத்தினார்.
அதோடு, பிரதமர் மோடி உக்ரைனுக்கும் பயணம் செய்திருக்கிறார். 1991-இல் சோவியத் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்ற பிறகு அங்கு சென்ற முதல் இந்திய பிரதமா் மோடிதான். ஆனால், இந்தப் பயணம் அதிக ஊடக வெளிச்சம் பெற்றதே தவிர அதிக அா்த்தமுள்ளதாக அமையவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் மோடி, உக்ரைன் போருக்கு பின்னரும் இரு நாடுகளிடையே ஒரு நல்ல நட்புறவை பேணி வருகிறார் எனபது கவனிக்கத்தக்கது.