திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி… போராட்டத்தில் சீமான்!

திருவேற்காடு மாநகராட்சி பகுதியில் கோலடி ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்திருக்கிறது, வருவாய்த்துறை. இதையடுத்து நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையிலான நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய 1,263 வீடுகளை 21 நாட்களுக்குள் அகற்ற, ஆக்கிரமிப்பு வீடுகளில் கடந்த 15-ம் தேதி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அந்த வருத்தத்தில் நவம்பர் 17-ம் தேதி தன் வீட்டிலேயே தற்கொலை செய்திருக்கிறார் தச்சு தொழிலாளியான சங்கர்.

சீமான்

அவரது மரணத்துக்கு நியாயம் கேட்கும் விதமாகவும், கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில் 400 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

போராட்டக் களத்தில் சீமான்

விவகாரம் பெரிதானதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோலடி பகுதிக்கு வந்து, தற்கொலை செய்த சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, போராடிய மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் “ஆக்கிரமிப்பு என்கிறார்களே.. அதிகாரிகளுக்கு தெரியாமல் மக்கள் வந்து குடியேறினார்களா? வீட்டை அகற்றக் கோரிய நோட்டீஸ் ஒட்டினாலும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தைரியமாக இருங்கள். கோலடி ஒரு ஏரி என்று சொல்லி இடிக்க வரும் இவர்கள் தான் பரந்தூரில் 12 ஏரிகளை அழித்துவிட்டு விமான நிலையம் கட்டத் துடிக்கிறார்கள். ராத்திரியோடு ராத்திரியாக இடிக்க வந்தாலும் நான் இங்கு வருவேன். நான் வர தாமதம் ஆனால் என் கட்சியினர் நிற்பார்கள். அழுவது கதறுவது கண்ணீர் வடிப்பதை முதலில் நிறுத்துங்கள். அதனால் எதையும் சாதிக்க முடியாது” என ஆறுதல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.