வாஷிங்டன்: அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்கைக்கோள் நேற்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில்நிலை நிறுத்தி உள்ளது. உள்நாடு மட்டுமின்றி சுமார் 34 நாடுகளின் 424 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவின் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ சார்பில் ஜிசாட் என்-2 என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இது 4,700 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக் கோளை இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே சுமந்து செல்ல முடியும். எனவே 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் என்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த பிரான்ஸின் ஏரியன் ஸ்பேஸ் நிறுவனத்தை இஸ்ரோ அணுகியது.
பிரான்ஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே முன்பதிவுகள் அதிகம் இருந்ததால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை இஸ்ரோ அணுகியது. இதன்படி அந்த நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் என்-2 செயற்கைக்கோள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கேப் கேனரவல் தளத்தில் இருந்து நேற்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ சார்பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி கட்டணம் செலுத்தப்பட்டது.
புதிய செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் இணைய வசதியை வழங்க முடியும். குறிப்பாக அந்தமான்-நிக்கோபர் தீவுகள், ஜம்மு-காஷ்மீர் மலைப் பகுதிகள், லட்சத்தீவு, வடகிழக்கு மாநிலங்களின் மலைப்பகுதிகளில் இணைய வசதியை வழங்க முடியும். விமான பயணிகளும் எளிதாக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
மத்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இண்டியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்), ஜிசாட் என்-2 செயற்கைக்கோளை இயக்க உள்ளது. அந்த அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சுமார் 14 ஆண்டுகள் செயற்கைக்கோள் பயன்பாட்டில் இருக்கும். இதன்மூலம் இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது: இப்போதைய நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளோம். வரும் காலத்தில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை இஸ்ரோவே விண்ணில் செலுத்தும். இவ்வாறு மாதவன் நாயர் தெரிவித்தார்.