மணிப்பூர் பிரச்சினை முதல் 2026 தேர்தல் வரை: திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்

சென்னை: இந்திய நாட்டின் அனைத்து தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருப்பதாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம். இதில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.20) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

> இந்திய நாட்டின் அனைத்துத் தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் சிந்தனைகளைத் தள்ளி வைத்து, இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும். தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்தியய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

> தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் மத்திய பாஜக அரசு, இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.

> மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் மணிப்பூரைக் கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் – மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மனிதநேயம் உயிர்பெற மத்திய பாஜக அரசு, குறிப்பாக, நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

> மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 விழுக்காடு நிதியை மத்திய அரசு தர வேண்டும். தமிழகத்தின் கோரிக்கைகள் 16-வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

> திமுக அரசின் சாதனைகள், திட்டங்கள், தமிழக முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது. கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.