பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பால் ஆஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

மெல்போர்ன்: பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, ஆஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் நகரத்தின் முக்கிய வீதியாக திகழும் போர்க் ஸ்ட்ரீட் வணிக வளாகத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது, குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கும். இந்தநிலையில், அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர் ஆமி செட்டால் ஆகியோர், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும் வகையில் நடப்பாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை புறக்கணிப்போம் என்று சமூக ஊடகங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனிடையே, போர்க் ஸ்டீரிட் வணிக வளாகத்தில் உள்ள ரீடெயில் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மியர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்க திட்டமிட்டிருந்தது. இது குறித்து அறிந்த போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வணிக வளாகத்துக்கு வெளியே போராட்டங்களையும் நடத்தினர். எங்களது போராட்டம், அமைதியான,வன்முறையற்ற போராட்டமாக தொடரும் என்று சமூக ஆர்வலர் ஆமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட மியர்ஸ் ரீடெயில் நிறுவனம் ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் வணிக வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

ஆனால், பாலஸ்தீன ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு விக்டோரியா மாகாணத்தின் பிரீமியர் ஜெசிந்தா ஆலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது: குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் அரசியலாக்கி உள்ளனர். இங்கு கிறிஸ்துமஸ் விழாவை நிறுத்துவதால் மத்திய கிழக்கில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அது மெல்போர்ன் சிறுவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே குறைப்பதாக இருக்கும். எனவே, இந்த போராட்டம் யாருக்கு உதவும்? மக்களுக்கு போரட்டங்கள் செய்வதற்கான உரிமை இருந்தாலும், அர்த்தமற்ற காரணங்களை கூறி மக்களை பிளவுபடுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை. மேலும், இதுபோன்ற பாரம்பரிய விழாக்களை அழிக்க அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.