இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற பிரதமர் மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்கினார்.
ஜி20 மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைதக் தொடர்ந்து நேற்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். நேற்று காலை கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி உற்சாகமான வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை, கயானா அதிபர் இர்ஃபான் அலி கட்டியணைத்து வரவேற்றார்.
56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கயானாவில் தரையிறங்கிய பிரதமர் மோடி, புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சற்று முன் கயானாவில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர் இர்ஃபான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி பிலிப்ஸ், மூத்த அமைச்சர்களுக்கு நன்றி.
இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை நாம் அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் ஸ்திரப்படுத்துவதாக அமையும். பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இணைந்து பணிபுரியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்ஜ்டவுன் சாவி ஒப்படைப்பு: அப்போது பிரமதர் மோடியிடம், ஜார்ஜ்டவுன் நகர மேயர் சாவியை ஒப்படைத்து மரியாதை செய்தார். இந்தியா-கயானா இடையேயான நெருங்கிய உறவுகளுக்கு சான்றளிக்கும் விதமாக இந்த சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய வம்சாவளியினர்:பின்னர் பிரதமர் மோடி, கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார். கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியாவிலிருந்து சுமார் 185 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறியவர்கள். சுமார் 3.20 லட்சம் இந்திய வம்சாவளியினர் கயானாவில் வசிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் இந்திய தேசியக்கொடியுடன் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் ஓவியத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். மேலும் பிரதமரை வரவேற்க வந்திருந்த இந்திய வம்சாவளியினர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.
ஜான் மசேட்டிக்கு பாராட்டு: முன்னதாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தன்னைத் சந்தித்துப் பேசிய வேதாதந்த தத்துவங்களைப் போதிக்கும் தத்துவ ஞானி ஜான் மசேட்டிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய தத்துவயியல் பாடங்களையும், மகான்கள் தொடர்பான தகவல்கள், போதனைகளை பிரேசில் நாட்டில் போதித்து வரும் ஜான் மசேட்டியின் சேவை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.