Doctor Vikatan: ஸ்டீம்பாத் (Steam bath) எடுத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்துவிட்டு, ஸ்டீம்பாத் (Steam bath) எனப்படும் நீராவிக்குளியல் எடுத்த நபர், மாரடைப்பில் உயிரிழந்த செய்தியைப் பார்த்தேன். ஸ்டீம்பாத் எடுப்பது என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா…. யாரெல்லாம் ஸ்டீம்பாத் எடுக்கலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்   

ஷீபா தேவராஜ்

ஸ்டீம்பாத் (Steam bath) எனப்படும் நீராவிக் குளியலுக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஸ்டீமிங் என்பது தசைகளைத் தளர்த்துவதற்காகச் செய்யப்படுவது. அதுவே விளையாட்டு வீரர்கள் ஸ்டீம்பாத் எடுக்கும்போது அது அவர்களது எடைக்குறைப்புக்கும் உதவியாக இருக்கும். நீராவிக் குளியலின் மூலம் நிகழும் தெர்மோஜெனிக் எஃபெக்ட்தான் (thermogenic effect) எடைக்குறைப்புக்கு உதவும். அதாவது சூடான நீராவியியானது  உடலின் வெப்பநிலையை அதிகரித்து, அதிக கலோரிகள் எரிக்கப்பட வழி செய்யும்.

ஸ்டீம்பாத் எடுக்கும் அறையில் மணிக்கணக்காக இருக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் 5 முதல் 10 நிமிடங்கள்தான் அந்த அறையில் இருக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு வெளியே வந்து ஷவர் குளியல் எடுக்க வேண்டியதுதான். எனவே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் இறப்புக்கும், அவர் எடுத்த நீராவிக் குளியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு என்னவெல்லாம் நடந்தது என்பதைத்தான் இங்கே கவனிக்க வேண்டும்.  மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய் பாதிப்புகளுக்கான ரிஸ்க் ஓரிரவில் ஆரம்பிக்கிற விஷயமல்ல. அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில், அதற்கு முன்பே, உடல் சில அறிகுறிகளை உணர்த்தும்.

சம்பந்தப்பட்ட நபர், சரியாகத் தூங்கும் வழக்கம் உள்ளவரா, சரியாக ஓய்வெடுப்பவரா, சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்பவரா, அப்படி எடுப்பவர் என்றால் அது தரமான சப்ளிமென்ட்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் அந்த நபர் அதிக நேரம் வொர்க் அவுட் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம்.  அளவுக்கதிக ஸ்ட்ரெஸ்ஸும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வொர்க் அவுட்

மாரடைப்பைப் பொறுத்தவரை, இன்று அதற்கான காரணம் ஆரம்பித்து அடுத்தநாளே அட்டாக் வந்துவிடாது. பலநாள்களாக உடலில் உள்ள பல பிரச்னைகளை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே ஒருநாள் அது நிகழும். தூக்கமின்மை, ஓய்வின்மை, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, தவறான சப்ளிமென்ட்டுகள் எடுப்பது என பல விஷயங்களின் விளைவாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நபர், தொடர்ச்சியாகப் பல மணி நேர உடற்பயிற்சிக்குப் பிறகு ஸ்டீமிங் எடுக்கச் சென்றிருக்கிறார். நீராவிக் குளியலுக்கு முன்பே அவரது இதயம் பலமிழந்திருக்கும்.

மற்றபடி ஸ்டீமிங் என்பது மிக நல்ல விஷயம். யார் வேண்டுமானாலும் நீராவிக் குளியல் எடுக்கலாம்.  ஸ்பா மசாஜ் எடுப்பவர்களுக்குக்கூட இப்போது ஸ்டீம் பாத் கொடுக்கப்படுகிறது. எனவே, இதயநலன் என்பது வாழ்வியல் முறை, உணவுப்பழக்கம், மனநிலை போன்றவற்றைப் பொறுத்தது. இந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் மாரடைப்பு ஆபத்திலிருந்து விலகி இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.