ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்து வருகின்றனர். இதற்காக மக்களுக்கு பணியாற்றநான் கடமைப்பட்டுள்ளேன். இத்தனை வருடங்களில் பல இன்னல்கள் கடந்து வந்துள்ளேன்.
செய்யாத குற்றத்திற்கு பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பினர். 53 நாட்கள் நான் சிறைவாசம் அனுபவித்தேன். இப்போது 4-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளேன். என் மீது மக்களுக்கு வைத்துள்ள நம்பிக்கையால் மீண்டும் இப்பதவிக்கு வந்துள்ளேன்.
கடந்த ஆட்சியில் பல துறைகள் வளர்ச்சியை எட்ட முடியாமல் திணறின. இறுதியில் கடன்தான் மிஞ்சி இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தபோது பல சவால்கள் காத்திருந்தன. இப்போது ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக்கொண்டு முன்னேறிச் செல்கிறோம்.
21 எம்பிக்களுடன் மத்திய அரசு முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம். இதனால் நம்முடைய செல்வாக்கும் டெல்லியில் அதிகரித்துள்ளது. பெண்கள் விஷயத்தில் யாராவது தவறாக நடக்க முயன்றால் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டு மனை வழங்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில், “கடந்த 150 நாட்கள் ஆட்சி மன நிறைவு அளிக்கிறது. அனைத்து துறைகளையும் கடந்த ஜெகன் அரசு பின்னுக்கு கொண்டு சென்றது. ஆனால், முதல்வர் சந்திரபாபுவின் அனுபவ திறன் ஆந்திராவை மீண்டும் புத்துயிர் பெற வைத்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் தற்போது ஆந்திரா பயணித்து வருவது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது” என்றார்.