கிராமம், நகர்ப்புறம் மற்றும் குறிப்பாக மலையகத்திலும் வாழும் வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (21) பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் சிம்மாசன உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்டில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், 70 முதல் 80 வயது வரை வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான உணவு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, வாழ்வதற்கு வீடு, வருமான வழி மற்றும் மன நிம்மதி வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பகட்டமாக தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரண உதவித்தொகை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டளவு அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு, புதுவருட ஆரம்பத்திhல் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொடுப்பனவொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒக்டோபர் மாதத்தில் ஓய்வூதியர்களின் கொடுப்பனவு 3000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் சிசு போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான போஷாக்கு உணவுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள வறுமை நிலை காரணமாக பெற்றுக்கொள்ள முடியாத பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.