புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது மத்திய அரசு. கடந்த வாரம் ‘3 வருட இளங்கலை பட்டப் படிப்பை மாணவர்கள் விருப்பப்பட்டால் 2 வருடங்களில் முடிக்கலாம். 4 வருட பட்ட படிப்பை 3 வருடங்களில் முடிக்கலாம்’ என்று பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் எம். ஜெகதீஷ்குமார் தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பட்டப்படிப்பை முடிக்க கூடுதலாக 6 மாதம் எடுத்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். வரும் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேசியக் கல்விக்கொள்கை நடைமுறையில் இல்லை. இந்தச் சூழலில் தமிழகத்திற்கும் இது பொருந்துமா என்ற கேள்வி மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய கல்லூரி மாணவர் ராகவேந்திரா, “நூற்றில் ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே இது சாதகமாக அமையும். அது மட்டுமல்லாமல் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளில் எழுத வேண்டிய தேர்வை 6 மாதத்தில் முடிக்க முயற்சி செய்வது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதே போல் ஒரு மாணவர் அப்படி இரண்டு ஆண்டுகளில் இளங்கலை பட்டத்தை முடிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர் ஓர் ஆண்டில் கற்றுக் கொள்ள வேண்டியதை வெறும் ஆறே மாதத்தில் கற்று முடிக்க வேண்டும். அப்படி அவர் செய்தால் எந்த அளவுக்கு அந்தப் பாடத்தை அவர் கற்றுக் கொள்வார் என்ற கேள்வி எழும். அதேநேரம், பட்டப்படிப்பை முடிக்க 6 மாதம் கூடுதலாக தருவது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக மாணவர்கள் செயல்பட்டால் அது மிகவும் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தும்” என்றார்.
பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் இந்த அறிவிப்பை கல்லூரிப் பேராசிரியர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் மஹாலெட்சுமி, “அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை எல்லோருக்கும் சம வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இது ஆசிரியர்களுக்கு பாதிப்பை உருவாக்கும். இப்போது ஆசிரியர்கள், மாணவர்களைப் பட்டியலிட்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 6 மாதத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும். அனைத்துக் கல்லூரியிலும் மாணவர்களை எப்படி பட்டியலிடுவது; இரண்டு ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு எப்படி தனித் தனியாக சொல்லி தருவது; ஆறு மாதம் கூடுதலாக படிக்கும் மாணவர்களுக்கு எப்படித் தனியாக சொல்லி தருவது போன்ற பல கேள்விகள் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு கண்டபிறகே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…” என்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான தன்னாட்சி கல்லூரிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய யுஜிசி தலைவர் எம் ஜெகதிஷ் குமார், “நம் நாடு தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம் . அதன்படி, நாம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் சமூக, பொருளாதார ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய சூழலில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க செய்வது என்பது உண்மையிலேயே பெரிய சவாலானது. எனவே வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் விரும்பினால் 3 ஆண்டு பட்ட படிப்பையும் 4 ஆண்டு பட்ட படிப்பையும் 6 மாதத்திற்கு முன்போ அல்லது தேவைப்பட்டால் 6 மாதம் கழித்தோ முடிக்கலாம்” என்று கூறினார்.
ஏராளமான அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்குக் கடும் பணிச்சுமை இருக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகே இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் வலுக்கிறது.