புதுடெல்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கால கட்டங்களில் எதிர்க்கட்சிகளே அப்போது ஆட்சியில் இருந்ததாக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் மாள்வியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு (நவ.25) முன்பாக, அதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியை ஏற்க உள்ள நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.மேலும், லஞ்ச குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள காலத்தில் ( 2021 ஜூலை முதல் 2022 பிப்ரவரி வரை ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரா மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் ஆட்சியில் இருந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.