India vs Australia first Test, KL Rahul Out Controversy | இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் 5 போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடும் நிலையில், கேஎல் ராகுல் அவுட் என மூன்றாவது நடுவர் கொடுத்த முடிவு சர்ச்சையாகியுள்ளது. அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட இந்த முடிவு இந்திய அணிக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது.
இந்தியா பேட்டிங் சொதப்பல்
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணியில் ஜெய்ஷ்வால், கேஎல் ராகுல் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். ஜெய்ஷ்வால் டக்அவுட்டாகி வெளியேற அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் எதிர்கொண்டு டக்அவுட்டானார். இதனால் இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. விராட் கோலி சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா டாப் கிளாஸ் பவுலிங்
இதனால், இந்திய அணி பெரும் சிக்கலில் சிக்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு டாப் கிளாஸில் இருந்தது. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக ஒரு முனையில் பந்துவீசும்போது இன்னொரு முனையில் ஹேசில்வுட் துல்லியமாக பவுலிங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதேபோல், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் அபாரமாக பந்துவீச இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். ஒரு ரன் எடுப்பது கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
ராகுல் சர்ச்சை அவுட்
இருப்பினும் ஒருமுனையில் கேஎல் ராகுல் சிறப்பாகவே ஆடிக் கொண்டிருந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை தடுத்தாட முயற்சித்தபோது ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். ஆன்ஃபீல்டு நடுவர் அவுட் கொடுக்க மறுத்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் அப்பீல் செய்தார். அப்போது ரிப்ளேவில், ராகுல் பேட்டில் பந்துபடவில்லை. அதேசமயத்தில் அவரின் பேட் கால் பேடில் பட்டது தெளிவாக தெரிந்தது. பந்து கிராஸ் ஆகும் நேரத்தில், பேட் பேடில் பட்டதால், மூன்றாவது நடுவரால் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. அதனால், கேஎல் ராகுல் அவுட் என அறிவித்துவிட்டார். இந்த முடிவு இந்திய அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கமெண்டரியில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களே கேஎல் ராகுல் அவுட் கொடுக்கப்பட்டது நடுவரின் தவறான முடிவு என தெரிவித்தனர்.
5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
கேஎல் ராகுல் விக்கெட்டை தொடர்ந்து துருவ் ஜூரல் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. ரிஷப் பந்த் மட்டும் ஓரளவுக்கு களத்தில் இருந்து ஆடிக் கொண்டிருந்தார். இதனால் இந்திய அணி 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.