சுக்மா: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மா மாவட்டத்தின் கோன்டா மற்றும் கிஸ்தாராம் பகுதி நக்சல்கள் கொராஜூகுடா, தண்டீஸ்புரம், நகரம், பந்தர்பாதர் ஆகிய கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட தனிப் படை (டிஆர்சி), சிறப்பு அதிரடிப்படை, பஸ்தர் பாதுகாப்புப் படை அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 நக்சல்கள் சுட்டுக்கொல்ப்பட்டதாக பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இன்று காலை முதல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 10 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.
நக்சல்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதியோ சாய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஷ்ணுதியோ சாய், “நக்சல்களுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மார்ச் 2026ம் ஆண்டுக்குள் நக்சல் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் இந்த இலக்கை எட்ட சத்தீஸ்கர் அரசு தொடர்ந்து பாடுபடும். இதற்காக, சத்தீஸ்கர் அரசும் பாதுகாப்புப் படையினரும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். கடந்த 11 மாதங்களில் சுமார் 200 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 600-700 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.