இந்திய ரயில்வே துறை தினமும் சுமார் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. பயணிகள் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்ய ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், 75 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் ஒரே ஒரு ரயிலில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய இயலும்.
பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் பக்ரா-நங்கல் ரயிலில் இலவசமாக டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம். கேட்போருக்கு வியப்பு தரும் இந்த இலவச ரயில் சேவை 75 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
பக்ரா-நங்கல் அணைக்கு அருகில் உள்ள பகுதிகள் வழியாக செல்லும் பபக்ரா-நங்கல் ரயில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவை தினமும் கடக்கிறது. சட்லஜ் ஆறு மற்றும் சிவாலிக் மலைகளைக் கடந்து, மூன்று சுரங்கங்கள் மற்றும் ஆறு ரயில் நிலையங்களின் வழியாகச் செல்கிறது இந்த ரயில்.
பக்ரா-நங்கல் ரயிலின் சுவாரசியமான கதை, 1948 இல் கட்டப்பட்ட பக்ரா-நங்கல் அணையுடன் தொடர்புடையது. ஆரம்பகாலத்தில் தொழிலாளர்களையும் கட்டுமானப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது.
அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இதே ரயில் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய நோக்கத்துடன் இயக்கப்பட்டது. பாதையின் அழகை மக்கள் இலவசமாக ரசித்து அனுபவிக்கும் வகையில் இந்த இலவச ரயில் சேவை தொடரப்பட்டு வருகிறது!!
தொடக்கத்தில், பக்ரா-நங்கல் ரயில் இயக்கத்தில் நீராவி என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டது. 1953 இல், இந்த ரயில் சேவையை மேம்படுத்த மூன்று நவீன இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த ரயில் நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:05 க்கு புறப்பட்டு காலை 8:20க்கு பக்ராவை சென்றடைகிறது. மேலும், ரயில் நங்கலில் இருந்து பிற்பகல் 3:05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ரா ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
இன்றும் தினமும் சுமார் 800 பேர் இந்த பக்ரா-நங்கல் ரயிலின் இலவச ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை இப்பகுதியின் இயற்கை காட்சிகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கி அதிக ஈர்ப்பைத் தருகிறது. மேலும், இந்த இலவச ரயில் சேவை உள்ளூர் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கி சிறப்பு சேர்ப்பது குறிப்பிடத்தக்கது.