பட்டாபிராமில் ரூ.330 கோடியில் பிரம்மாண்ட டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். 5.57 லட்சம் சதுர அடியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும், பசுமை கட்டிட வழிமுறைகளின்படியும் இந்த டைடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். அந்த இலக்கை அடைவதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

தகவல் தொழில்நுட்ப துறையின் எதிர்கால அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு. கடந்த 2000-ம் ஆண்டில் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார்.

இது தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது. 2, 3-ம் நிலை நகரங்கள் இதைத் தொடர்ந்து, முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் வகையில், 2, 3-ம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். வெப்பராக்ஸ் சொல்யூஷன்ஸ், டாட்நிக்ஸ் டெக்னால் ஜிஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான உத்தரவுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், டிஆர்பி. ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

6,000 பேர் பணிபுரியலாம்: தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடியில் அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைதொடர்பு சாதனங்கள், தடையற்ற உயர் அழுத்த மும் முனை மின் இணைப்பு. மின் இயக்கி. மின்தூக்கி, சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை கட்டமைப்பு கள், கண்காணிப்பு கேமராக்கள்.

அரங்கம், பாதுகாப்பு வசதிகள், உணவகம், உடற்பயிற்சி கூடம், 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும், பசுமை கட்டிட வழிமுறைகளின்படியும் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் வட பகுதியை சேர்ந்த, குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.