சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.18.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் புரிபவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவுக்குள் அவர்கள் நுழைய வகை செய்யவும், தமிழகத்தில் 5 இடங்களில் ரூ.100 கோடியில் மெகா கிளஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, தானியங்கி வாகனங்கள், இயந்திரங்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் துல்லிய பொறியியல் பாகங்களை உருவாக்கும் மையமாக கருதப்படும் சென்னை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர் கூட்டமைப்பினருடன் இணைந்து துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.47.62 கோடியில் ரூ.33.33 கோடி அரசு மானியத்துடன் இதை அமைக்க அரசாணையும் வெளியிடப்பட்டது.
காப்புரிமை பதிவு மையம்: இந்த பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக, ரூ.18.18 கோடி மதிப்பில், ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனை கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, துறை செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ மேலாண் இயக்குநர் ஆ.கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3 லட்சம் நிறுவனங்களுக்கு பயன்: அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன்பெறலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (Precision Engineering Technology Centre) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள பொது வசதிகளை சென்னை மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 1,000 தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.