மே.வ. முதல் உ.பி. வரை: பேரவை இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் ஆதிக்கம்!

புதுடெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கர்நாடகாவில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டன. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்தியப் பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் சிக்சர் அடித்த திரிணமூல்: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 6 பேரவைத் தொகுதிகளில் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி சம்பவம், அதனைத் தொடர்ந்த மருத்துவர்களின் போராட்டம் பொதுமக்களின் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸின் இந்த வெற்றி பெரும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இடைத்தேர்தல் நடந்த ஆறு தொகுதிதளில் 5 திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான தெற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. மதரிஹாட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 2021-ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் பாஜக 6-ல் வெற்றி, சமாஜ்வாதி 2-ல் வெற்றி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 எம்எல்ஏக்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்களின் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகின. அதேபோல் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்ஃபான் சோலங்கி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒன்பது தொகுதிகளில் காசியாபாத், கைர் மற்றும் புல்பூர் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குந்தர்கி, தேதேகரி மற்றும் மஜாவன் தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் மீராபூரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கார்கல் மற்றும் சிசாமாவ் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடகாவில் ஆளுங்கட்சி வெற்றி: கர்நாடகா மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த சென்னாபட்டனா, ஷிக்கான் மற்றும் சந்துர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பிஹாரில் என்டிஏ கூட்டணி ஆதிக்கம்: பிஹார் மாநிலத்தில் இடைத் தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளில் ஒன்றான இமாம்கஞ்ச் தொகுதியில் என்டிஏ கூட்டணி கட்சியான இந்துஸ்தானி அவாம் மோர்சா (மதசார்பற்றது) வேட்பாளர் தீபா குமாரி வெற்றி பெற்றுள்ளார். மற்ற மூன்று தொகுதிகளான தராரி, பெலகஞ்சி, ராம்கர் ஆகிய தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலையில் உள்ளனர்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி: பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் சப்பேவால், கிதர்பாவா மற்றும் தேரா பாபா நானாக் ஆகிய 3 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. பர்னாலாவில் காங்கிஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் பாஜக வெற்றி: ராஜஸ்தான் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஜுன்ஜுனு, ராம்கர், தியோலி யுனியரா, கின்வஸ்ரா, சலும்பேர், சோராசி ஆகிய தொகுதிகளில் பாஜகவும், தவுசா தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

அசாம் மாநிலத்தின் தோலை, பேஹாலி தொகுதிகளில் பாஜகவும், சித்லி தொகுதியில் யுனைட்டட் பிப்பூள்ஸ் பார்ட்டி லிபரல், போங்கைகான் தொகுதியில் அசோம் கானா பரிஷித் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

அதேபோல், சத்தீஸ்கரின் தெற்கு ராய்பூர், குஜராத்தின் வாவ் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

கேரளாவின் பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், செலக்காரா தொகுதியில் சிபிஎம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் சிக்கிம் கராந்திகரி மோர்ச்சா கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.