மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது என்று சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி படுதோல்வி கண்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் எப்படி சூழ்நிலை மாறியது என்று தெரியவில்லை. இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. இனி ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி. நட்டா கூறியிருந்தார். அந்த திசையை நோக்கித்தான் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு கட்சி ஒரு தேசம். மக்களிடம் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
மகாயுதி கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது வெற்றி சுனாமி அலை போன்று உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சுனாமி வருவதற்கு அவர்கள் என்ன செய்தனர்? 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின்போது ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை மகாராஷ்டிர மாநில மக்கள் கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது. இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 ப்ளஸ் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கிட்டத்தட்ட 50 தொகுதிகளை எட்டவே திணறியது