சென்னை: சென்னையில் வசிக்கும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பில் புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஆட்டோ வாங்குவதற்காக 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்துக்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். சென்னையை சேர்ந்த 25 முதல் 45 வயதுக்கு மிகாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் பெண்கள், இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்க தகுதியான பெண் ஓட்டுநர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ‘சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) அல்லது (வடக்கு), 8-வது தளம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை – 600 001’ என்ற முகவரிக்கு நவ.23-ம் தேதிக்குள் (நேற்று) அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திட்டத்தில் பயன்பெற முன்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதுவும் நீக்கப்பட்டுள்ளது. எனவே, இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு சமூக நலத்துறை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.