ஊழல் வழக்கு; கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்

வாஷிங்டன்,

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமங்கள் தொழில் செய்து வருகிறது. இந்தியாவில் துறைமுகம், மின்சாரம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளிலும் அதானி குழும நிறுவனங்கள் கோலோச்சி வருகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தில் இருக்கும் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழும நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் கோர்ட்டில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022-க்கு இடையிலான காலகட்டத்தில், ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு – காஷ்மீர், சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு புகாரை தொடர்ந்து, அதானி குழும நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் 21 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அதானியின் சாந்திவிதான் இல்லத்திற்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நியூயார்க் கோர்ட்டு மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மனுக்கு பதிலளிக்க தவறினால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.