புதுடெல்லி: நாடு முழுவதும் 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவின் வய நாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தேடு மக்களவை தொகுதிகளில் கடந்த 13 மற்றும் 20-ம் தேதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள் குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின. மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவின் நாந்தேடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஹம்பார்டே வெற்றி பெற்றார்.
உத்தர பிரதேசத்தின் 9 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 6, சமாஜ்வாதி 2, ராஷ்ட்ரிய லோக்தளம் 1 தொகுதிகளில் வென்றன. ராஜஸ்தானின் 7 தொகுதிகளில் பாஜக 5, காங்கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடங்களில் வென்றன. மேற்கு வங்கத்தின் 6 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வென்றது. அசாமின் 5 தொகுதிகளில் பாஜக 3, அசாம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வென்றன.
பிஹாரின் 4 தொகுதிகளில் பாஜக 2, ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலா 1 இடத்திலும் வென்றன. பஞ்சாபில் ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1 இடங்களில் வென்றன. கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வென்றது. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா 1 இடத்தில் வென்றன.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் தலா 1 இடத்தில் வென்றன. சிக்கிம் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வென்றது. குஜராத்தில் பாஜக 1, உத்தராகண்ட்டில் பாஜக 1, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 1 இடத்திலும், சத்தீஸ்கரில் பாஜக 1 இடத்திலும் வென்றன. இடைத் தேர்தல் நடைபெற்ற 48 சட்டப்பேரவை தொகுதிகளில் 20-ல் பாஜக வென்று முதல் இடத்தை பிடித்தது.