திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல் சனாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்துவிடும்: திருமாவளவன்

சென்னை: திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல் சனாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்துவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அண்மையில் மறைந்த கவிஞர் தணிகைச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னையில் கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் திருமாவளவன் பேசியதாவது: தமிழ்தேசியம் என்பது மொழிவழி தேசியம். அப்படி தமிழ்தேசியம் இருக்கிறது என்றால் மலையாளம், தெலுங்கு போன்ற தேசியங்களும் இருக்கின்றன. அனைத்து மொழிவழி தேசிய இனங்களும் ஒருங்கிணைந்து இந்தி திணிப்பை எதிர்த்து, மாநில உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதாக அமைய வேண்டும். பிறமொழி இனங்கள் மீதான வெறுப்பை உமிழக் கூடாது.

அது இனவாதமாக போய் முடியும். சனாதனத்தை எதிர்க்க உருவான கருத்தியல்தான் திராவிடம். திராவிடம் என்ற கருத்தியலில் இருந்துதான் மொழிவழி தேசியம் உருவாகிறது. திராவிடம், மொழிவழி தேசியம் ஆகியன வேறல்ல. இவ்வாறிருக்க திராவிடத்தை எதிரியாக காட்டி தமிழ்தேசியத்தை வளர்க்க முற்படுகின்றனர். அது வெற்றி பெறாது.

அந்த அரசியலை பேசுவோரை எதிர்க்கும் நோக்குடன் பேசவில்லை. இப்படி பேசும் அரசியல் சனாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்கிறது என்னும் கவலையில் பேசுகிறேன். தேசியவாதத்தை புரிந்து கொண்டால் திராவிடமா தமிழ்தேசியமா என்ற உரையாடலே தவறு என புரிந்து கொள்ளலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

நிகழ்வில், விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.