ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸ் சார்பாக கவியரங்கு நடைபெற்றது.
கவிதைகள் மூலம் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும், உலகம் முழுவதும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸின் 43 சர்வதேச மாநாடு வியாழக்கிழமை துவங்கியது.
மாநாட்டின் தொடர்ச்சியாக ராமேசுவரம் மற்றும் காரைக்குடியில் உலக கவிஞர்கள் காங்கிரஸின் சார்பாக கவியரங்குகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு உலக கவிஞர்கள் காங்கிரஸின் தலைவர் மரியா யூஜீனியா சோபரானிஸ் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, கலாம் அண்ணன் மகள் நசிமா மரைக்காயர், பேரன் ஷேக் சலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவியரங்கத்தில் உலக கவிஞர் கவிஞர்கள் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிறமாநிலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் தங்களின் கவிதைகளை வாசித்தனர். கவிஞர் ஈசாக் நன்றியுரையாற்றினார்.