India vs Australia, Virat Kohli Century Celebration: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைப் போலவே மூன்றாவது நாளான இன்றும் இந்திய அணி பேட்டிங்கின் மூலம் ஆதிக்கம் செலுத்தியது.
நவ. 22ஆம் தேதி போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கியது. இதனால், 46 ரன்கள் என்ற முன்னிலையுடன் இந்திய அணி அடுத்த இன்னிங்ஸை தொடங்கியது எனலாம்.
ஜெய்ஸ்வால் சதம்
அதன்பின், இந்திய அணியின் ஓப்பனர்கள் கேஎல் ராகுல் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பேட்டிங் விளையாட வந்து, இன்று காலை வரை நிலைத்து நின்று விளையாடினர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், ஜெய்ஸ்வால் சதம் அடித்து மிரட்டினார். ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து வந்த படிக்கல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 161 ரன்களிலும், ரிஷப் பண்ட் 1, துருவ் ஜூரேல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று ரன்களை குவித்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக ரன்களை குவிக்க விராட் கோலியும் தனது வேகத்தை மாற்றி சதம் நோக்கி சீறினார்.
விராட் கோலி மிரட்டல் சதம்
அத்துடன் 143ஆவது பந்தில் பவுண்டரி அடித்து தனது 30ஆவது டெஸ்ட் சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். விராட் கோலி சதம் அடித்ததும் ஆக்ரோஷமாக கொண்டாடாமல், மன நிம்மதியை வெளிக்காட்டும் வகையில் கொண்டாடி, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மாவை நோக்கி முத்தங்களை பறக்கவிட்டும் அந்த சதத்திற்கு அழகூட்டினார். விராட் கோலி சதம் அடித்த கையோடு இந்திய அணியும் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. விராட் கோலி 100 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி
534 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஓப்பனர் நாதன் மெக்ஸ்வீனி முதல் ஓவரிலேயே பும்ராவிடம் டாக்அவுட்டானார். அடுத்து இன்றைய நாள் நிறைவடைய 20 நிமிடங்கள் இருந்த நிலையில், நைட்வாட்ச்மேனாக கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளே வந்தார். ஆனால் அவரும் 8 பந்துகள்தான் தாக்குபிடித்தார். அவர் சிராஜிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து லபுஷேனும் பும்ராவிடம் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா 4.2 ஓவர்களில் 12 ரன்களை மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 7 விக்கெட்டுகளும், ஆஸ்திரேலியாவுக்கு 522 ரன்களும் தேவை. இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் கையிலிருக்கிறது. நாளைய தினமே ஆட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.