சீனாவில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது `மகாராஜா’.
மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் மாதம் தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உள்பட பலரும் நடித்திருந்தனர்.
ஓ.டி.டி-யில் வெளியான பிறகும் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான படங்களில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இப்படியான அமோக வரவேற்பை பெற்ற `மகாராஜா’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி சீனாவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்திய திரைப்படங்களுக்கு எப்போதும் சீனாவின் என்டர்டெயின்மென்ட் மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.
இதற்கு முன்பும் சீனாவில் பிரமாண்ட ரிலீஸ் கண்ட இந்திய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அமீர் கானின் இரண்டு திரைப்படங்கள் சீனாவில் பிரமாண்டமான முறையில் வெளியாகியிருக்கிறது. அமீர் கானின் `தங்கல்’ திரைப்படம் 9,000 ஸ்கிரீன்களிலும், `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ திரைப்படம் 11,000 ஸ்கிரீன்களிலும் வெளியாகியிருக்கிறது. இதனை தாண்டி `பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 18,000 ஸ்கிரீன்களில் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட 40,000 ஸ்கிரீன்களில் மகாராஜா திரைப்படம் வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.