திமுக, அதிமுகவால் கூட்டணியின்றி வெற்றி பெற முடியாது: கே. பாலகிருஷ்ணன்

மதுரை: திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணியின்றி வெற்றி பெறுவது இயலாது என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு இன்று தொடங்கியது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதில் பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என பல கோணங்களில் ஆய்வு செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசம் வழங்கக்கூடாது என, பாஜக தெரிவித்தது. ஆனால், அதே பாஜக மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போன்று இலவசங்களை அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பாஜகவிற்கு ஒரு நியாயமா.

பாஜக தேர்தல் வெற்றிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யும். வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டம் மோடி அரசு , மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டும் ஏற்பாடாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இத்திட்டத்தை எதிர்க்கும் வகையில் நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். குடியுரிமை சட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பாஜக அமல்படுத்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள் விலை குறையும்போது, பெட்ரோல் விலையை மோடி அரசு குறைக்க மறுக்கிறது. கடந்த ஓராண்டாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டில் மணிப்பூர் கலவர பூமியாக மாறிய நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் சென்று இலவசங்களை கொடுக்கக் கூடாது என பாஜக வழக்கு போட்டது. மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிருக்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என தெரிவிக்கின்றனர். பாஜகவிற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் நாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறது. வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோத அணுகு முறையாகவே, இதை நாங்கள் பார்க்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, அத்திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம். புதிதாக வந்துள்ள சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கின்றனர். அவர்களுடன் யார் கூட்டணி சேர போகிறார்கள். அப்படி சேர்ந்தாலும் அவர்கள் என்ன வெற்றி பெற போகிறார்களா? வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு வழங்க போகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். மதுரை அரிட்டபட்டியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்க, திட்டமிட்டிருக்கும் பாஜக அரசு வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.