மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற வழிவகுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் பிரிந்து கட்சியை கைப்பற்றியதோடு தே.ஜ கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் அஜித் பவார் பிரிந்து பாஜக., தலையைிலான மகாயுதி கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார். இந்த கூட்டணிக்கு கடந்த மக்களைவை தேர்தலில் மிகப் பெரியளவில் வெற்றி வாய்ப்பு இல்லை. எதிர் அணியான மகா விகாஸ் அகாடி 48 மக்களவை தொகுதிகளில் 30-ஐ கைப்பற்றியது.
இதேபோன்று, சட்டப்பேரவை தேர்தல் முடிவும் இருக்கும் என எதிர்பார்த்த மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடந்த 2019 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில் இருந்து 70 இடங்களின் வெற்றியை ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பிரித்து சென்று தே.ஜ கூட்டணியில் சேர்த்துள்ளனர். மொத்தத்தில் சிவசேனா ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி ஆகியவை சுமார் 90 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. இவற்றில் சுமார் 70 இடங்கள் இவர்களின் தாய் கட்சிகள் வசம் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 95 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா (தாக்கரே அணி) 20-க்கும் கீழான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி 86 இடங்களில் போட்டியிட்டு 15-க்கும் குறைவான இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
சிவ சேனா (ஷிண்டே அணி) வெற்றி பெற்ற தொகுதிகளில் 40 இடங்கள் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா வசம் இருந்தன. தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் அணி) வெற்றி 37 இடங்களில் 32, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சரத் பவார் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறி்ப்பிடத்தக்கது.
இதனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் இந்த தேர்தலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவு படாமல் இருந்திருந்தால், மகா விகாஸ் கூட்டணிக்கு கூடுதலாக 70 இடங்கள் கிடைத்திருக்கும்.