ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் சென்னை அணி ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் அஹமதுவை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. அஷ்வினை விட சென்னை அணி அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்பின்னர் யார்?
ஸ்பின்னர்களின் பட்டியலில் நூர் அஹமதுவின் பெயர் வாசிக்கப்பட்டவுடனேயே சென்னை அணி ரேஸில் இறங்கிவிட்டது. சென்னைக்கு எதிராக மும்பையும் கையை உயர்த்திக் கொண்டே இருந்தது. சென்னை பின்வாங்குவதாகவே இல்லை. ஏலம் 5 கோடியை எட்டியவுடன் மும்பை அணி கழன்று விட்டது. நூர் அஹமது சென்னைக்கு விற்கப்படவிருந்த சமயத்தில் குஜராத் RTM கார்டை எடுத்துக் கொண்டு வந்தது. சென்னை அணி இப்போது ஒரு விலையை சொல்லியாக வேண்டும். ஏற்கனவே 5 கோடிக்கு உறுதி செய்து வைத்திருக்கிறார்கள். எனவே அதற்கு மேல் ஒன்றிரண்டு கோடி சேர்த்து 7 கோடிக்கு சென்னை கேட்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரேடியாக நூர் அஹமதுவின் மதிப்பை 10 கோடியாக சென்னை உயர்த்தியது. சென்னையின் விலையை கேட்டு மிரண்ட குஜராத் அணி பின் வாங்கியது. நூர் அஹமது சென்னையின் மேஜைக்கு வந்து சேர்ந்தார்.
நூர் அஹமதை தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இரட்டிப்பு விலையை சொல்லி சென்னை அணி கேம் ஆடியது. அந்தளவுக்கு நூர் அஹமதை சென்னை ஏன் நம்ப வேண்டும்? நூர் அஹமது ஒரு இடதுகை சைனாமேன் ஸ்பின்னர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். 15 வயதிலேயே ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீகில் ஆட தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் அண்டர் 19 அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆட தகுதிப்பெற்றவர், கடந்த 2023 ஆம் ஆண்டில் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையிலும் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தார். சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும். அந்தப் போட்டியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் என பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுகளையெல்லாம் நூர் அஹமதுதான் வீழ்த்தியிருந்தார்.
ஐ.பி.எல் லிலும் கடந்த இரண்டு சீசனில் குஜராத் அணிக்காக 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அமெரிக்காவில் ஐ.பி.எல் பாணியில் நடக்கும் MLC யில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் இன்னொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆடி வருகிறது. அந்த அணியிலும் நூர் அஹமது ஆடி வருகிறார். கடைசி சீசனில் டெக்ஸாஸ் அணியின் அதிக விக்கெட் வீழ்த்திய பௌலர் நூர் அஹமதுதான். ஏற்கனவே சென்னை அணி நிர்வாகத்துடன் பரிச்சயமானவராக இருப்பதாலும் சென்னை அணி இவருக்கு கூடுதல் ஆர்வத்தை காட்டியிருக்கக்கூடும்.
மேலும், ரஷீத்கானை போல நூர் அஹமதுவும் உலகமெங்கும் நடக்கும் லீக் போட்டிகளிலெல்லாம் ஆடி வருகிறார். சேப்பாக்கத்தில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் இணைந்து வீரியமாக வீசக்கூடிய திறன் நூர் அஹமதுவுக்கு இருப்பதாலயே சென்னை அணி அவருக்கு நேராக 10 கோடியை சொல்லி வாங்கியிருக்கக்கூடும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…