ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது: நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்கு, ஊழல் வழக்குகளை தொடர்ந்து என்னை செயல்பட விடாமல் தடுத்தனர். ஆனால் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் மிகுந்த சவாலாகவும், கடினமாகவும் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே, எங்கள் அணியினரை களமிறக்கி வெற்றி இலக்குகளை அமைத்தோம். அதேபோல் எங்கள் அணியினர் மிகச்சிறந்த களப்பணியாற்றி நாங்கள் விரும்பியதை எங்களுக்குத் தந்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 14 இடங்களில் 5 இடங்களை ஜார்க்கண்டில் வென்றோம். தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளோம். நான் சிறையிலிருந்து முன்னதாகவே வெளியே வந்திருந்தால், மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருப்போம். என்னுடைய மனைவி கல்பனா சோரன் ஒரு நபர் ராணுவமாக (ஒன் மேன் ஆர்மி) செயல்பட்டு வெற்றி தேடித் தந்தார். எங்களை வீழ்த்துவதற்காக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அவர்கள் என்னென்ன தந்திரங்கள் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச மக்களை ஊடுருவச் செய்கிறோம் என்று பொய்யான பல கதைகளை பாஜக தலைவர்கள் கூறினர்.
பாஜகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பெரும்பாலான நேரம் இதைப் பற்றித்தான் பேசினார்கள். பழங்குடியின மக்களின் வாக்குகளை சிதறடிக்க இதுதான் சரியான வழி என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. வாக்காளர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையேயான உறவு, வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையேயான உறவு போன்று ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் தேவைகளை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் அவர்களுடன் எப்படி இருந்தோம் என்பதை மக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் எங்களுடன் மிக நெருங்கிப் பழகினர். வாக்காளர்களின் மனதில் தோன்றிய ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒவ்வொரு கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளிப்பதை உறுதி செய்தோம்.
பழங்குடியின மக்களின் வாக்குகளை கவர பாஜக தலைவர்கள் முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த வெற்றிக்கு எனது தந்தை சிபு சோரனும் காரணம். ஏனென்றால் அவர் பழங்குடியின மக்களுடன் நெருங்கிப் பழகியவர். பழங்குடியின மக்கள் அவரால் திரட்டப்பட்டு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எங்களுடன் இல்லாதது இதுவே முதல் முறை. ஆனால் அவரது போராட்டத்தையும் பங்களிப்பையும் மக்கள் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.