முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருவதை முன்னிட்டு, குன்னூரில் தீவிர அங்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் 27-ம் தேதி வருகிறார். இதையொட்டி, உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளம் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தீட்டுக்கல்லில் இருந்து உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் வரை சாலையை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருவதுடன், ராஜ்பவனும் புதுப்பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.
வரும் 28-ம் தேதி குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க ராணுவத்தின் பாரம்பரிய குதிரைப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முப்படைகள் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்.பி. நிஷா, கூடுதல் ஆட்சியர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.