‘வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: “வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரதமர் பேசியதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதிகாரப் பசியைக் கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். அந்த விரக்தியில் சில கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்கு முயற்சி செய்கின்றன. மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதுமே செயல்பட்டதில்லை. அதுவும், காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாடாளுமன்றத்தின் மாண்புகளைப் பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயல்படக்கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆனால் சில எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல்கள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தின் அலுவல் நேரத்தை மாண்புடன் பயன்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச மரியாதையும் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை: இதற்கிடையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் திரண்டுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருவதாகத் தெரிகிறது.

மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.