India vs Australia Perth Test Result: நம்பர் 1 டெஸ்ட் அணியான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் (Border Gavaskar Trophy) முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை குவித்துள்ளது. இதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன் மெல்போர்னில் 1977ஆம் ஆண்டு 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுதான் சாதனையாக இருந்தது.
இந்திய அணியின் (Team India) மீது பல்வேறு அழுத்தங்கள், விமர்சனங்கள் இருந்த நிலையில், கேப்டன் பும்ரா தலைமையில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியை குவித்துள்ளது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு அணியாக இந்திய அணி இணைந்து முழு திறனையும் வெளிக்காட்டியிருக்கிறது. அனுபவ வீரர்கள் முன்னின்று வழிநடத்திச் செல்ல, இளம் வீரர்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்ததன் விளைவாகவே இந்த வெற்றி வசமாகி உள்ளது.
அனுபவமும், இளம் வீரர்களும்…
கேஎல் ராகுல் இந்த ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்துகொள்ள வேண்டும் என்பது புரிந்துகொண்டது மட்டுமின்றி அதை இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலுக்கும் புரியவைத்து அவரையும் ஜொலிக்கவைத்துள்ளார். அதுபோலவே, வேகப்பந்துவீச்சில் பும்ரா கலக்க சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணாவும் தங்களின் பங்களிப்பை செய்து முடித்தனர். விராட் கோலியின் நிச்சயம் இந்த தொடருக்கு பெரிய ஊக்கமளித்திருக்கிறது. நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர் எனலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வெற்றி பெற்றதற்கு இதுவே காரணம்.
Scorecard – https://t.co/gTqS3UPruo#TeamIndia | #AUSvIND pic.twitter.com/3ewM5O6DKs
— BCCI (@BCCI) November 25, 2024
பும்ரா சொன்னது என்ன?
அந்த வகையில், வெற்றிக்கு பின் ஆட்ட நாயகன் விருதை பெற்றபோது பேசிய இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, “தொடக்கம் சிறப்பாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. முதல் இன்னிங்ஸில் கடும் அழுத்தத்திற்கு ஆளானோம். ஆனால் அதன் பின் நாங்கள் சுதாரித்து செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது.
2018ஆம் ஆண்டிலும் இங்குதான் முதல் போட்டியை விளையாடினோம். நீங்கள் இங்கே தொடங்கும் போது, விக்கெட் கொஞ்சம் மென்மையாக ஈரப்பதத்துடன் இருக்கும். பின்னர் அடுத்தடுத்து ஆடுகளம் வேகத்திற்கு உதவியளிக்கும். அந்த அனுபவத்தை நம்பி இருந்தேன்.
கடைசியாக விளையாடிய ஆடுகளத்தை விட இந்த ஆடுகளம் பவுன்ஸிற்கு கொஞ்சம் உதவியாக இருந்தது. நாங்கள் இதற்காக நன்றாக பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்தோம். அந்த வகையில், ஒவ்வொரு வீரர்களிடம் அவர்களின் செயல்முறை மற்றும் திறன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.
விராட் கோலியின் பார்ம் என்ன?
விளையாடும்போது அனுபவம் முக்கியமானது, இருப்பினும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தலாம். வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளார். இதுவே அவரது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாக கூட இருக்கலாம்.
அவர் பந்தை விக்கெட் கீப்பருக்கு அதிக விட்டா. அவர் அடித்தாடும் குணம் கொண்டவர், ஆனால் அவர் பந்தை நன்றாக விக்கெட் கீப்பர் பக்கம் விட்டுவிட்டு நீண்ட நேரம் களத்தில் நிலைத்துநின்று விளையாடினார். விராட் கோலி குறித்து, நான் அவரை ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை. சவாலான ஆடுகளங்களில் ஒரு பேட்ஸ்மேன் ஃபார்மில் இருக்கிறாரா என்பதை தீர்மானிப்பது மிக மிக கடினம். அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக விளையாடினார்” என்றார்.