கார்த்திக் இயக்கத்தில் தாலி தனஞ்ஜெயா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜீப்ரா’. தெலுங்கில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த நவம்பர் 22ம் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் ‘கங்குவா’ படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்தும் திரைப்படங்களை முதல் இரு வாரங்களுக்கு விமர்சிக்கக் கூடாது, திரையரங்க வளாகத்தில் மக்கள் ரீவ்யூவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அடுத்தடுத்த நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் நடிகர் சத்யராஜ், “விமர்சனங்கள் நல்ல படங்கள் ஓடுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதேசமயம் சிலர் கட்டம் கட்டி, உள்நோக்கத்துடன் தவறான நோக்கத்தில் கடுமையான விமர்சனங்களை செய்கிறார்கள். படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு, ஆனால், தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய, தாக்கிப் பேச யாருக்கும் உரிமையில்லை. படத்தில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விமர்சனம் செய்யுங்கள். அந்தப் படத்தையே காலி செய்யும் அளவிற்குக் கடுமையான விமர்சனங்களை செய்யாதீர்கள். படத்தை விமர்சனம் செய்யும் மக்கள் படத்தின் நிறை, குறைகளைச் சொல்லுங்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசி, கடுமையாக விமர்சிக்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.