புதுடெல்லி: அந்தமான் நிகோபார் அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட 6 ஆயிரம் கிலோ எடைகொண்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை, கப்பலில் இருந்த 6 மியான்மர் நாட்டவர்களை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், “கடந்த 23ம் தேதி இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது போர்ட் பிளேயரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே மீன்பிடி இழுவை கப்பல் ஒன்று சந்தேகத்துக்கு உரிய வகையில் நகர்வதைக் கண்ட விமானி, கப்பலின் வேகத்தை குறைக்க எச்சரித்தார்.
அதோடு, அந்தமான் நிகோபாரில் உள்ள இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, உடனடியாக, அருகிலுள்ள எங்கள் விரைவு ரோந்துக் கப்பல்கள் பேரன் தீவை நோக்கி விரைந்தன. இதனையடுத்து, விசாரணைக்காக அந்த மீன்பிடி இழுவைக் கப்பல் போர்ட் பிளேயருக்கு இழுத்து வரப்பட்டது.
விசாரணையில், கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தலா 2 கிலோ எடையுள்ள சுமார் 3,000 பாக்கெட்டுகளில் பேக் செய்யப்பட்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மீன்பிடி இழுவை கப்பலில் இருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்காக மெத்தம்பேட்டமைன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கூட்டு விசாரணைக்காக அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்திய கடல் பகுதியில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்படுவது இது முதல் முறையல்ல. 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.