சென்னை: “உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு நீதி விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சிறுபான்மை சமூகத்துக்குப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசலில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை எதிர்த்துஅறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1991-ல் இயற்றப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் ஆகஸ்ட் 15, 1947-க்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த உரிமை கோரல்கள் குறித்து புதிய வழக்குகளோ சட்ட நடவடிக்கைகளோ எடுக்க இயலாது என வரையறுத்துள்ளது. இந்தச் சட்டம் விதித்துள்ள தடையை மீறி உபி மாநிலம் சம்பலில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட சாஹி ஜாமா பள்ளிவாசலில் ஆய்வுகள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிவாசலை இரண்டாம் முறை ஆய்வு செய்வதற்காக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் தலைமையில் ஆறு நபர் குழுவினருடன் சங்கி கும்பல் ஒன்றும் நுழைவதற்கு முயன்ற போது பிரச்சினை எழுந்தது. காவல்துறை தரப்பில் போராட்டக்காரர்கள் கல்விச்சு நடத்தியதாகவும் அதற்கு எதிராகக் கண்ணீர்ப் புகை கொண்டு வீசியும் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தைக் கலைத்தோம் என்று கூறி வருகின்றனர். பொது மக்களைக் கலையச் செய்வதற்குக் கண்ணீர்ப் புகை கொண்டு பயன்படுத்துவது போதுமானது.
துப்பாக்கிச் சூடு நடத்தும் போது முழங்காலுக்குக் கீழேதான் சுடப்படவேண்டும் என்பது விதி. அதனை மீறி அவசர கதியில் ஆய்வுக்கு உட்படுத்தியதையும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்து முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே பிளவையும் பாகுபாட்டையும் உருவாக்க பாஜக அதிகாரத்தைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறது. ஒற்றுமையுடன் வாழும் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவது என்பது மாநிலத்துக்கும் இந்திய நாட்டுக்கும் பயன் விளைவிக்கும் செயல் அல்ல.
துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட நயீம், நோமன் மற்றும் பிலால் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு நீதி விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சிறுபான்மை சமூகத்துக்குப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க மத அடிப்படைவாத சிந்தனையாளர்களுக்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்,” என்று அவர் கூறியுள்ளார்.