மும்பை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நானா படோல் விலகி உள்ளார்.
மகாராஷ்டிராவின் கோந்தியா பகுதியை சேர்ந்த நானா படோல் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவில் அவர் இணைந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் அவர் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். கடந்த 2021-ம் ஆண்டில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவராக நானா படோல் பதவியேற்றார். அவரது தலைமையில் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவின் 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நானா படோலின் கை ஓங்கி இருந்தது. கூட்டணி கட்சித் தலைவர்கள் சரத் பவார், உத்தவ் தாக்கரேவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க அவர் மறுத்தார். இதனால் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு நானா படோல் செய்தியாளர்களிடம் கூறும்போது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று தெரிவித்தார். இதற்கு சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்தச் சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தம் 103 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நானா படோல் விலகி உள்ளார். எனினும் அவரது ராஜினாமாவை ஏற்க கட்சி தலைமை மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.