சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால், கும்மிடிப்பூண்டி – சென்னை நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களில், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் தினசரி 120-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியான திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, ரயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து, சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டி – திருவொற்றியூர் இடையே உள்ள ரயில் நிலையங்களில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சிரமத்துக்குள்ளாகினர். ரயில் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரியாமல் அதிருப்தி அடைந்தனர்.
அருகில் செல்ல வேண்டிய இடங்களுக்கு சிலர் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். இதற்கிடையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு மாலை 6.46 மணிக்கு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயங்கத்தொடங்கின. சிக்னல் கோளாறு காரணமாக, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.