தொழிலதிபர் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதானியிடமிருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானித்தோம். இதற்கு அதானி குழுமம் ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்வந்தது. ஆனால், இப்போதுள்ள நிலையில் ரூ. 100 கோடியை முதல்வரும், அமைச்சர்களும் பங்கிட்டு கொண்டார்கள் என பலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது.
எனவே அதானி குழுமம் சார்பில் ரூ. 100 கோடியை வழங்க வேண்டாம். அந்த நன்கொடையை நாங்கள் ஏற்க இயலாது என கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம். தேவையில்லாமல் தெலங்கானா அரசை அதானி விவகாரத்தில் இழுக்க வேண்டாம்.
டெண்டர் விவகாரத்தில் சட்டப்படிதான் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கினோம். நிபந்தனைகளின்படியே அதானி குழுமம் டெண்டரில் பங்கேற்றது. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் டெண்டரில் பங்கேற்க உரிமை உள்ளது. அம்பானி, அதானி, டாடா என யாராக இருந்தாலும் சட்டப்படி டெண்டரில் பங்கேற்கலாம்.
நான் டெல்லிக்கு செல்வதை சிலர் கேலி செய்கின்றனர். 28 முறை டெல்லி சென்றதாக கணக்கு காட்டுகின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. என் மீது எவ்வித வழக்குகளும் இல்லை. மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் நிதி கேட்க செல்கிறேன். இனியும் செல்வேன். இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.