வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.
இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 880 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1050 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும்.
தற்போது பூமத்திய ரேகை பகுதிகளில் எதிரெதிர் திசை காற்று வீசும் நிகழ்வு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும்போது, இலங்கையில் நிலப்பரப்போடும் தொடர்பு ஏற்படக்கூடும். இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், நவ.28 முதல் டிச.1-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (நவ.26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
28-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 30-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 27, 28-ம் தேதிகளில் வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புயல் எச்சரிக்கை கூண்டு: இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.