குளிர்கால கூட்டத் தொடர் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கூடிய பிறகும், அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி வழங்கவில்லை. இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால், நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும், அதானி விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ‘‘அவையின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்’’ என்று ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தினார். இதற்கு பதில் அளித்த கார்கே, ‘‘54 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு நீங்கள் அறிவுரை கூற தேவையில்லை. உங்களுக்கு உரிய மதிப்பு, மரியாதை அளித்து வருகிறேன். ஆனால், நீங்கள் எதிர்மறையாக பேசி வருகிறீர்கள்’’ என்றார்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும், அதானி விவகாரம், சம்பல் கலவரம், மணிப்பூர் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: 2024-ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. 2025-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்க காத்திருக்கிறோம். 75-வது ஆண்டு அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை தொடங்க உள்ளோம். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இங்கு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் பொறுப்புடன் செயல்படுகின்றனர். இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிலர் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர். சுமார் 90 முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர். ஜனநாயகத்தை அவர்கள் மதிக்கவில்லை. மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தக்க சமயம் வரும்போது தண்டிக்கின்றனர், நிராகரிக்கின்றனர்.

புதிய எம்.பி.க்கள் புதிய சிந்தனைகளுடன் நாடாளுமன்றத்தில் பேச ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களை பேசவிடாமல் சிலர் தடுக்கின்றனர். இது வருத்தம் அளிக்கிறது. அனைத்து கட்சிகளிலும் புதிய எம்.பி.க்கள் பேச வாய்ப்பு தர வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் பாரதத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது. பாரதத்தின் பெருமை, கண்ணியத்தை காக்க வேண்டியது எம்.பி.க்களின் கடமை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டி, “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது. இதில் வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 முக்கிய மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு தின கொண்டாட்டம் காரணமாக, மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் இன்று நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.