லக்னோ: உ.பி.யில் உடைந்த பாலத்தில் இருந்து கார் ஆற்றில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். கூகுள் மேப் உதவியுடன் சென்றதால் இந்த விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
உ.பி.யின் பரேலி மாவட்டம் பரித்பூரில் ராம்கங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்தின் நடுப்பகுதி சமீபத்திய மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில் அந்த கார் உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து மறுநாள் காலைதான் உள்ளூர் மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் 3 பேரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.
விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குருகுராமில் உள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தின் அடையாள அட்டை காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் உ.பி.யின் ஃபருக்காபாத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் செல்போன்கள் பரிசோதிக்கப்பட்டதில் அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணம் செய்தது தெரியவந்தது” என்றார்.
விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்தினர் கூறும்போது, “பாலம் முழுமையற்று இருப்பதை கூகுள் மேப் காட்டாது. பாலத்தின் தொடக்கத்தில் அதிகாரிகள் தடுப்புகளும் எச்சரிக்கை பலகையும் வைத்திருக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து பரித்பூர் துணை ஆட்சியர் குலாப் சிங் கூறுகையில், “இதுகுறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.