உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியை நம்பி, உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதால், ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பேசு பொருளாக மாறியுள்ளது. முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் (Google Maps) உதவியாக இருக்கிறது என்றாலும், அதனை கவனமான பயன்படுத்த வேண்டும். என்பதைத் தான் மேற்கண்ட சம்பவம் உணர்த்துகிறது.
புதிய இடத்திற்குச் செல்கையில் Google வரைபடத்தைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில், கூகுள் மேப்ஸ் நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. ஆனால் சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் சில தவறான வழிகளை பரிந்துரைக்கிறது. அதன் காரணமாக நாம் பாதை மாறி சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். அல்லதுசமீபத்தில் உத்திர பிரதேசத்தில், கூகுள் மேப்ஸ் தவறான வழிகளைக் காட்டியதால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் போல் பெரிய விபரீதம் ஏற்படலாம். எனவே, பயன்படுத்தும்போது நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
கூகுள் மேப்ஸ் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம்
சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், கூகுள் மேப் கூறிய தவறான தகவல்களால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்கு சென் திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களுக்கு, முழுமையடையாத மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இவர்கள் கூகுள் மேப்ஸ் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில், கார் கீழே விழுந்ததில் அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.
கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்யவும்
முதலில் உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸை அப்டேட் செய்யவும். பழைய பதிப்புகளில் தவறான தகவல்கள் இருக்கலாம். எனவே, கூகுள் மேப்பை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருங்கள். கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. எனவே அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
ஸ்ட்ரீட் வியூ என்னும் வீதிக் காட்சி அம்சத்தை பயன்படுத்தவும்
நீங்கள் புதிய இடத்திற்குச் சென்றால், Google வரைபடத்தில் வீதிக் காட்சியைப் பயன்படுத்தவும். இதன் மூலம் சாலைகளின் சரியான நிலை தெரியும். வீதிக் காட்சி அம்சத்தஒ பயன்படுத்த, வரைபடத்தில் உள்ள திசைகாட்டி ஐகானைக் கிளிக் செய்து, ஸ்ரீட் வ்யூ என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் இலக்கைத் தேடவும். சாலையில் செல்வதற்கு முன், கூகுள் மேப்ஸில் காட்டப்பட்டுள்ள வழியை ஜூம் செய்து பாருங்கள். இதன் மூலம் பாதை குறித்த சரியான தகவல்களை நீங்கள் புரிந்து கொள்ள உதவும். நீங்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும். கூகுள் மேப்ஸில் உள்ள சாலைத் தகவல் அவ்வப்போது தான் புதுப்பிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் வீதிக் காட்சி அம்சம் சாலையின் சரியான நிலைமைகளை உங்களுக்கு வழங்கும்.
பாதை வித்தியாசமாக உணர்ந்தால் அருகில் இருப்பவர்களிடம் கேளுங்கள்
கூகுள் மேப்ஸ் உங்களுக்கு விசித்திரமான அல்லது மிகவும் குறுகலான வழியைக் காட்டுவதாக நீங்கள் உணர்ந்தால், உள்ளூர் நபரிடம் கேளுங்கள். வரைபடத்தில் சரியான சாலை தகவல் இல்லாமல் இருக்கலாம்.