இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் ‘நாக்-அவுட்’ சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் தமிழக அணி சிக்கிமை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் 88 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சிக்கிம் தமிழக வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தமிழகம் 134 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.