‘கங்குவா’ திரைப்படத்திற்குக் கடுமையான விமர்சனங்கள் வந்தது கோலிவுட்டில் பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
குறிப்பாக, கடுமையான விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று “இனி முதல் ஒரு வாரங்களுக்குத் திரைப்படங்களை விமர்சிக்கக் கூடாது” என்றும் “திரையரங்க வளாகத்தில் ரசிகர்களின் விமர்சனங்களை வீடியோ FDFS வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது” என்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.
இதுகுறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், ‘Silent’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்பவன். ஒரு படத்தைப் பாராட்ட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். இது இரண்டும் நடக்கவில்லை என்றால் அந்தப் படம் வெளியானது யாருக்கும் தெரியாமலேபோய்விடும். பாராட்டை ஏற்றுக் கொள்வோம். அதேபோல விமர்சனத்தையும் ஏற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்வோம்.
படத்தை முதல் ஒரு சில வாரங்களுக்கு விமர்சிக்கக்கூடாது என்ற நடவடிக்கைகள் ரொம்பத் தவறான விஷயமாக நான் கருதுகிறேன். விமர்சனங்களால்தான் நல்ல திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பைப் பெறுகிறது. எத்தனையோ திரைப்படம் விமர்சனங்களுக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. ‘சேது’, ‘ஒரு தலை ராகம்’ படங்கள் நல்ல விமர்சனங்களுக்குப் பிறகு வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றன. அந்த விமர்சனங்கள் இல்லையென்றால் இயக்குநர் பாலா, டி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் இன்று இல்லை.
சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தபிறகு, அப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஒருவேளை அந்தப் படத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு விமர்சனம் வந்திருந்தால் அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்காது. ஒரு வாரத்திற்குப் பிறகு விமர்சனம் வருவதற்குள் நல்ல படங்கள் காணாமலே போய்விடும்.
பெரிய ஸ்டார் திரைப்படங்களைப் பிரபலப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிறிய பட்ஜெட் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது விமர்சனங்கள்தான். முன்பெல்லாம் ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நல்ல மார்க் போட்டால், நல்ல விமர்சனம் வந்தால் அதை போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். அந்தப் படங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தன. இப்போது இருப்பவர்கள் நாகரிகமான, நியாயமான, ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வையுங்கள்.
ஒரு வாரத்திற்கு விமர்சிக்கக்கூடாது என்று சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள். என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்று படத்தை ஒரு வாரத்திற்கு திரையிடத் தயாரா? இப்படி பல சிக்கல்கள் இருக்கிறது. அதனால், படத்தை விமர்சனம் செய்யவிடுவதுதான் நல்லது. விமர்சனம் செய்பவர்கள் பொறுப்புடன் ஆரோக்கியமான விமர்சனங்களை செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார்.